இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெறும். இதில் 21 நாட்டு பிரதிநிதிகள் பங்குபற்ற உள்ளனர். முதல் நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொள்கிறார்.
“எதிர்கால பொலிஸ் துறை : தெற்காசியாவுக்கான வாய்ப்புகளும் சவால்களும்” என்ற தலைப்பிலான இந்த மாநாடு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ், மூலோபாய கற்கைகளுக்கான பிராந்திய நிலையம் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது. “எதிர்கால பொலிஸ்துறை” தொடர்பான இந்த மாநாட்டில் தெற்காசிய பிராந்தியம் மற்றும் வேறு நாடுகளின் அதியுயர் பொலிஸார் மற்றும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவோர் தெற்காசியாவில் பொலிஸ் சேவை தொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்ட மற்றும் நடைமுறை ரீதியான அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். கல்வியியலாளர்கள், தொழில் வல்லுனர்கள், நிபுணர்கள், சிவில் சமூக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றோர் இந்த மாநாட்டின் முதல் இரண்டு தினங்களில் பங்குபற்றுவதுடன் இரண்டாவது மற்றும் இறுதி நாளானது பல்வேறுபட்ட கல்வியியலாளர்கள், நிபுணர்களுடன் இலங்கையின் “எதிர்கால பொலிஸ்தறை “ தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி கலந்துரையாடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பொலிஸ் சேவையின் முக்கியம் குறித்து தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் அவசியமான கருப்பொருட்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன. பொலிஸ் சேவையின் மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறல், சமூக பரிபாலனம், தொழினுட்பம், பயங்கரவாதம், மனித உரிமை உட்பட பல தலைப்புகளில் இங்கு அமர்வுகள் நடைபெறும்.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்து வெளியிட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர,
பொலிஸ் திணைக்களத்தை மீளமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டினூடாக வலய நாடுகளின் அனுபவங்களை பகிர முடியும். பயங்கரவாதம், போதைப் பொருள் போன்றன தொடர்பில் இணைந்து செயற்படுவது குறித்து ஆராய வாய்ப்பாகும் என்றார்.