இலங்கையில் மசகு எண்ணெய் ஆய்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோலியத்துறைஅமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பாக தெரிவிக்கையில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெனிவிஸ்டா நிறுவனம் மசகு எண்ணெய் ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு எந்தவித தேவையும் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ,
தரம்குறைந்த எரிபொருள் இறக்குமதி முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றிலேயே ஆகக்கூடிய இலாபமாக இந்த வருடத்தில் பெறும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இந்த வருமானம் 7500 கோடி ரூபாவாக அமைந்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
தமது அமைச்சிற்கு உட்பட்ட எரிபொருள் செயலகம் மற்றும் மெற்றோ பொலிற்றன் நிறுவனம் இலாபத்தை பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எரிபொருள் விநியோகத்தின் போது இடம்பெறும் முறைகேடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிவாயுக்கான சர்வதேச ஐ.எச்.எஸ்.நிறுவனத்துடன் விரைவில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.