காத்தான்குடியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் சிகரட் விற்பனையை நிறுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எம்.றஹ்மதுல்லாஹ் தெரிவித்தார்.
இளைஞர்கள், மாணவர்களிடத்தில் போதைப் பொருளை ஒழிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா காரியாலயத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வறு தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோதகர் எம்.றஹ்மதுல்லாஹ் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
காத்தான்குடி பிரதேசத்தில் பிரதானமாக சிகரட் வியாபாரத்தை மேற்கொண்டு வந்த 17 வர்த்தக நிலையங்கள் முற்றாக சிகரட் விற்பனையை நிறுத்தியுள்ளது. இதனால் அந்நிறுவனம் காத்தான்குடியில் நாளொன்றுக்கு சுமார் 6 இலட்சம் ரூபா விற்பனையில் சரிவைக் கண்டுள்ளதாகவும் அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த 17 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் சிகரட் விற்பனையை நிறுத்தியது எங்கலாலல்ல. இறைவனுக்கு பயந்து, எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அனைவரும் செயற்பட்டால் நமது பிரதேசத்தில் இருந்து போதைப் பொருளை ஒழிக்க முடியும்.
மாணவர்கள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் பலர் இன்று இந்த புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்களை நாம் அதில் இருந்து மீட்டு எடுக்க வேண்டும். இந்த போதைப் பொருள் பாவனையால் எதிர்காலத்தில் பிறக்கும் தமது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் வரை தாக்கங்கள் ஏற்படுத்தும். போதைப் பொருள் பாவனையை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் சமூகத்துக்காக முன்வர வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் இவ்வாரம் காத்தான்குடியில் ஜும்ஆ பிரச்சாரம் மேற்கொள்ளும் உலமாக்கள், ஜம் இய்யதுல் உலமா நிருவாகிகள் மற்றும் ஊடகவியலாளார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-அப்துல் கையூம்