Monday, October 10, 2016

புதிய அரசியலமைப்பில் புத்த மதத்திற்கு முன்னுரிமை. ஏனைய மதத் தலைவா்களும் இணக்கம். - பிரதமா்.

புத்தசாசனத்தை பாதுகாப்பது தொடர்பில் அரசியலமைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட ஏனைய மதத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சாஞ்சியில் தேரவாத பௌத்த தர்மத்தை ஆய்வு செய்வதற்காக பிரிவெனா ஒன்று ஆரம்பிக்கப்படுமென்றும் பிரதமர் கூறினார்.

கொலன்னாவ சேதவத்த வெஹெரகொட புராண விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் உரையாற்றுகையில் , புத்த சாசனத்தை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளமை தொடர்பில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. அதனால், இதனை பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை .

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் புத்த சாசனத்தை வார்த்தையில் மாத்திரம் பாதுகாக்கவில்லை. சிலர் வார்த்தைகளால் மாத்திரம் இதனை பேசி வருகின்றனர். அடுத்த வருடம் நாட்டில் நடைபெறும் சர்வதேச வெசாக் வைபவத்திற்கு அனைத்து பௌத்த நாடுகளும் அழைக்கப்படும். 2018ம் ஆண்டில் இலங்கையில் தேரவாத பௌத்த மாநாடு நடத்தப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ உரையாற்றுகையில், தற்போதைய அரசாங்கம் அனைத்து விஹாரைகளையும் அபிவிருத்தி செய்யுமென்று குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சங்கைக்குரிய தம்பர அமில தேரர் விகாராதிபதி சங்கைக்குரிய அம்பன்வெல ஞானாலோக தேரர் ஆகியோரும் உரையாற்றினார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Disqus Comments