(
~அ(z)ஸ்ஹான் ஹனீபா~)சர்வதேச மட்டத்தில் முழுக்க முழுக்க வெளிநாட்டு மாணவர்களுக்கென சகல வசதிகளுடன் தனித்துவமிக்க முன்னோடியாக உருவாக்கப்பட்ட ஒரேயொரு பல்கலைக்கழகம் என்றால் அது புனித மதீனாவில் அமைந்திருக்கும் இஸ்லாமிய பல்கலைக்கழகமாகும்.(Islamic University of Madeena)
இது, தூய அஹ்லுஸ் ஸூன்னாக்களது நேரிய கொள்கைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இற்றைக்கு சுமார் 55 வருடங்களுக்கு முன் 1961ம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் திகதி (1381-06-26) ஸஊதி நாட்டின் உயர்கல்வி அமைச்சின் கீழ் பதியப்பட்டு அஸ்திவாரம் இடப்பட்டது. இங்கு முதன் முதல் வேந்தராக அஷ் ஷைக் முஹம்மத் இப்றாஹீம் ஆலுஷ் ஷைக் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும். அவரைத் தொடர்ந்து வேந்தராக பதவியேற்ற உலகம் போற்றும் அறிஞரும் மார்க்க மேதையுமான அஷ் ஷைக் இப்னு பாஸ் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் மாணவர்களது கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் எனில் மிகையாகாது அத்தோடு 2016ம் ஆண்டு வரை ஏழு வேந்தர்கள் இப்பல்கலைக்கழகத்தில் கடமை வகித்து அதன் வரலாற்றில் தடம் பதித்திருக்கன்றனர். மேலும் இதன் இணையதள முகவரி www.iu.edu.sa.comஎன்று அமையப்பெறுகின்றது.
இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட 25000-27000 வரையிலான வெளிநாட்டு மாணவர்கள் புலமைப்பரிசில் பெற்று சகல வசதிகளுடன் இலவசமாக கல்வி கற்று வருகின்றனர், இவர்கள் அந்தந் நாடுகளில் இருக்கும் முஸ்லிம்களது விகிதாசாரத்திற்கேற்ப பல நிபந்தனைகள் மற்றும் தகமைகளுடன் இப்பல்கலைக்கழத்திற்கு உள்வாங்கப்படுகின்றமை போற்றப்படவேண்டிய விடயமாகும்.
தற்பொழுது எமது இலங்கை நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 130 மாணவர்கள் (ஆலிம்கள்) மேற்படிப்பு நிமித்தம் இங்கு இளங்கலை, டிப்ளோமா, முதுமாணி, மற்றும் இளநிலை போன்ற கற்கை நெறிகளை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனர், அத்தோடு இதுவரை இலங்கையைச் சேர்ந்த 200 ஆலிம்கள் பட்டம்பெற்று வெளியேறியிருப்பதும் குறித்துக்குக் காட்டப்படவேண்டியதொரு விடயமாகும்.
பாரியளவு விசாலமான பரப்பளவைக் கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் ஆரம்ப காலங்களில் அமைக்கப்பட்ட இஸ்லாமிய சட்டபீடம், ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான பீடம், அல் குர்ஆன் பீடம், இஸ்லாமிய அழைப்பு அதன் அடிப்படைகளுக்கான பீடம், மற்றும் அரபுப் பாசைக்கான பீடம் ஆகிய ஐந்து பீடங்களும் அத்தோடு அண்மையில் அமைக்கப்பட்ட கணினி பீடம், வைத்திய பீடம், பொறியியல் பீடம், மருந்தியல் பீடம், செயல்முறை அறிவியல் பீடம் ஆகிய ஐந்து பீடங்களுமாக மொத்தம் பத்து பீடங்களைக் கொண்டு இப்பல்கலைக்கழகம் அறிவுச் சிகரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
அனைத்து பீடங்களுக்கும் தகுந்த பீடாதிபதி, உப பீடாதிபதி, விரிவுரையாளர்கள் உரிய முறையில் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு போதுமானளவு விரிவுரைகள் கொடுக்கப்படுவதோடு அவர்கள் சர்வதேச அரங்கில் இஸ்லாத்தை உள்ளால் உள்ளபடி போதிப்பதன் நிமித்தம் ஆளுமையுள்ள வினைத்திறனுள்ள ஆலிம்களாக பட்டம்பெற்று வெளியேறுவதற்காக சிறந்த கற்கை நெறிகள் மற்றும் பயிற்சிகள் சிறப்புத்தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்களால் வழங்கப்பட்டு அழகிய முறையில் வழிநடாத்தப்படுகின்றனர் . மேலும் இங்கு மாணவர்களின் கற்றலுக்கான அனைத்து வசதிகளும் நிரப்பமாக செய்துகொடுக்கப்படுவது மாத்திரமன்றி அவர்களது முன்னேற்றத்திற்கான சகலவிதாமான ஏற்பாடுகளும் சிறப்பாக நிறைவேற்றப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
மாணவர்களுக்கான மாதாந்த மானியம் உட்பட இலவச மருந்து,கற்றல், வாசிகசாலைகள்,தங்குமிட வசதிகள், மஸ்ஜதுந் நபவிக்கான போக்குவரத்து வசதிகள், வருடா வருடம் தாய்நாடு சென்று திரும்புவதற்கான இலவச விசா (நுழைவிசைவு)மற்றும் நுழைவுச்சீட்டு போன்ற இன்னோரன்ன வசதிகள் சிறப்பாக வழங்கப்படுகின்றமை மெச்சத்தக்க வேண்டியவையாகும்.
இவ்வாறாக கல்விக்கு முக்கியத்துமளித்து மார்க்க அறிவு உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையவேண்டும், இஸ்லாமிய மயப்படுத்தப்பட்ட மக்கள் உருவாக வேண்டும் எனும் நந்நோக்கில் செயற்படும் இவ்விஸ்லாமிய பல்கலைக்கழகம் மென்மேலும் அதன் நோக்கங்களை அடைவதற்கும் என்றும் கல்விப் பணியில் சிகரம் தொடுவதற்கும் வல்லவன் அல்லாஹ் அனுகூலம் பொழிந்தருள்வானாக! ஆமீன்
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா மதனீ
ஹுஸைனியாபுரம்- பாலாவி