இலங்கை வெளிநாட்டு சவூதி தூதரக அனுமதிப்பத்திர வேலைவாய்ப்பு முகவர் நிலைய அங்கத்தவர்களின் சங்கமான“SEARRA” இற்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரளவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த, புதன்கிழமை (26.10.2016) ஹோட்டல் கிங்க்ஸ்பரியில் இரவு இரபோஷனத்துடன் இடம்பெற்றது.இவைபவத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நிறைவேற்று பணிப்பாளர் உபுல் தேஷபிரியவும் கலந்துகொண்டார்.
பதிவுசெய்யப்பட்ட முகவர் நிலையங்களுக்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டன. கடந்த ஆட்சிக்காலத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த முகவர்கள் இந்த கலந்துரையாடலின் பின்னர் “தற்போதைய ஆட்சியில் கடந்த ஆட்சியைவிட முகவர் நிலையங்கள் பெரிதும் பிரச்சினைகளுக்கு தள்ளப்பட்டுவிட்டது” என்று அங்கு வந்த முகவர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடலின்போது, “SEARRA” அமைப்பினரின் கருத்துக்களுக்கு அமைச்சர் தலதா அத்துகோரள பதிலளிக்கையில் “5 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் இருக்கும் தாய்மார்கள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்ல தடையாக இருக்கும் (FBR) குடும்ப பின்னணி அறிக்கை சட்டத்தை என்னால் ரத்து செய்ய முடியாது. பாராளுமன்றத்தால் மாத்திரமே அதனை ரத்து செய்ய முடியும்
“தற்போது 5 வயதாக உள்ள சட்டத்தை 12 வயதாக மாற்றினாலும் மிகசிறந்ததாகும். நான் ஒரு தாய் என்ற முறையில்; ஒரு பிள்ளை தாயின் அரவணைப்பில் 12வயது வரை இருப்பதையே நான் விரும்புகிறேன். இது எனது சொந்த கருத்தாகும்.” – என்று கூறினார்.
“FBR” ஐ 40 வயதுவரை குறைக்கும் படி அமைப்பினர் அவ்விடத்தில் வேண்டுகோள் விடுத்தும், அதை பார்ப்போம் என்றும் அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வெளிநாடு செல்லும் ஆண்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் ஆங்கிலப்பாடம் கட்டாயமயப்படுத்தப்படும் என்றும், 300 அமெரிக்க டாலருக்கு மேலான சம்பளத்திற்கு ஆட்களை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாகவும், இனிமேல் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரம் கொடுக்கப்படமாட்டாதென்றும், தற்போது சுமார் 3300 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் கிட்டத்தட்ட 1250 முகவர் நிலையங்களே இயங்கிக் கொண்டிருப்பதாகவும், வருடத்திற்கு ஒருவரையாவது அனுப்பாத முகவர் நிலையங்களும் தற்போது காணப்படுவதாகவும். அவ்வாறான முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாதென்றும் அவர் தெரிவித்தார்.
“SEARRA” அமைப்பின் அங்கத்தவர்களின் அடுத்த கோரிக்கையான தற்போது பணிப்பெண்களுக்கு 45 நாட்களாக இருக்கும் பயிற்சியை முன்னைய ஆட்சி காலத்தில் இருந்ததுபோல 12 நாட்களாக குறைக்கும்படி வேண்டியதையும் நிராகரித்த அமைச்சர்; பெண்கள் வெளிநாடு செல்வதற்கு முகவர் நிலையங்களினால் வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகையை, பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு கொடுக்கப்படும் இலஞ்சமாக தான் கருதுவதாக தெரிவித்தார்.
வெளிநாடுகளிருந்து உறவினர்கள், நண்பர் மூலமாக பெற்றுக்கொள்ளும் விசாக்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SELF REGISTRATION) பதிவு செய்யும் தற்போதைய தொகையையும் மேலும் அதிகரிக்க எண்ணியுள்ளேன். கடந்த வருடத்தில் வெளிநாடு வேலைகளுக்கு சென்ற மக்கள் தொகையை விட இந்த வருடத்தில் குறைவாகவே மக்கள் வெளிநாடு வேலைகளுக்கு சென்றுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரின் பேச்சைக்கேட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தலையில் பெரும் இடி விழுந்ததுபோல் இருந்தனர். அமைச்சரின் நிலைபாட்டை சற்றும் எதிர்பார்க்காத முகவர்கள், நிலை தடுமாறி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தனர். இங்கு வருகை தந்திருந்த முகவர்கள் “அமைச்சரின் வருகையால் எந்த பயனும் இல்லை. முன்னைய ஆட்சி காலத்தில் எமக்கிருந்த ஒரு சில பிரச்சினைகள் இந்த ஆட்சியில் தீரும் என நம்பினோம், அனால், நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. இவர்கள் வாக்கு கேட்கும்போது தந்த வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து விட்டனர்.” என சலசலத்தனர். நல்லாட்சில் முகவர் நிலையங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று நம்பியவர்கள் ஏமாற்றத்துடனேயே வீடு திரும்பினர்.
-முஹம்மத், கொழும்பு