மேற்கு அன்டார்டிக்காவில் உள்ள ஸ்மித் பனிப்பாறை மிக வேகமாக உருகி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த பனிப்பாறையின் தடிமன் அளவு 7 ஆண்டுகளில் 0.5 கிமீ அளவுக்குக் குறைந்திருப்பது, புவி வெப்பத்தின் அதீத தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
மேற்கு அன்டார்டிக்காவின் அமண்ட்சன் கடலில் உள்ள ஸ்மித் பனிப்பாறை, கடந்த 2002 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆண்டுதோறும் 70 மீட்டர் (230 அடி) அளவுக்கு தடிமன் குறைந்து வந்துள்ளது.
மேற்கு அன்டார்டிக்கா மற்றும் கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள், கடல் மட்டத்தை பல மீட்டர் அளவுக்கு உயர்த்தக்கூடியவை.
இவை முற்றிலும் உருகினால், அருகில் உள்ள பல நகரங்கள் மட்டுமல்லாது, ஆற்றங்கரையோர பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
எனினும், எத்தனை பனிப்பாறைகள், எந்தெந்த இடங்களில் எந்தளவுக்கு உருகுகின்றன என்ற தகவல்களில் போதுமான அளவுக்குத் துல்லியத்தன்மை இல்லையென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஸ்மித் பனிப்பாறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அதே நேரத்தில், அதன் அருகே உள்ள போப் மற்றும் கோலெர் பனிப்பாறைகள் மிக மெதுவாக உருகி வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.