Thursday, November 21, 2013

2014 வரவு செலவுத் திட்டம் இன்று ஜனாதிபதி மூலம் பாராளுமன்றத்தில். சமர்ப்பிப்பு!

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் எட்டாவது வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை இன்று பிற்பகல் 1:04 க்கு சமர்ப்பித்து உரையாற்றுவார்.

2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் செலவினங்களுக்கு 154,252 கோடி 25 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் புதிய வரிகளும் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

2014 ம் வருட வரவு-செலவு திட்டத்திற்கான நிதியொதுக்கீட்டு சட்ட மூலம் கடந்த ஒக்டோபர் 22 ம் திகதி சபை முதல்வர் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வாவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை 2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து நவம்பர் 22ம் திகதி முதல் 29ம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 29ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இடம்பெறும்.

அத்துடன் குழு நிலை விவாதங்கள் டிசெம்பர் 2ம் திகதி முதல் 20ம் திகதி வரை சனிக்கிழமைகள் அடங்கலாக 16 நாட்களுக்கு இடம்பெறும். 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் மாதம் 20ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டம் இடம்பெறும் காலப் பகுதியில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு விஜயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு வழமையை விடவும் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆளும் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு மேலாக தண்ணீர் போத்தல் வீசப்பட்டது. இந்நிலையில், இம்முறை மக்கள் கலரிக்கு வருவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய முதலமைச்சர்கள் வருவர்
 
வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனும் வட மேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் இம்முறை சபாநாயகரின் கலரிக்கு வருகை தருவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவு திட்ட உரையின் போது கலந்து கொள்வதா இல்லையா எதிர்க்கட்சிகள் தீர்மானித்து வருகின்றன!

இலங்கை அரசாங்கத்தின் 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்  இன்று நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதில் கலந்துக் கொள்வதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இன்றைய வரவு செலவுத் திட்ட அமர்வை புறக்கணிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
2014 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டமானது பொது மக்களுக்கு நிவாரணங்களை கொண்டு வரும் வரவு செலவுத்திட்டமாக அமையவில்லை.
வழக்கமாக அரசாங்கம் சிறுபிள்ளைகளுக்கு இனிப்புப் பண்டங்களை காண்பிப்பது போன்றே இந்த முறையும் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளது.

எனவே ஜனநாயக தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஜே வி பியும் இந்த வரவு செலவுத் திட்டத்தை செவிமடுப்பது அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பில் ஜனநாயக தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் நாளைய தினம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படும் என்ற, ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் வரவு செலவுத் திட்டத்தை புறக்கணிக்கத் தீர்மானம்?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

எனினும், இந்த வரவு செலவுத் திட்ட யோசனை சமர்ப்பிப்பை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவு செலவுத் திட்ட யோசனை சமர்ப்பினை புறக்கணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி போன்ற கட்சிகள் இது தொடர்பில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் வழங்காத வரவு செலவுத் திட்டமொன்றுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.

எனினும், இன்று சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் எவ்வாறு புறக்கணிக்கும் என்பது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை கட்சிகள் வெளியிடவில்லை.
Disqus Comments