Wednesday, November 6, 2013

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு பல்கலைக்கழகங்களுக்கு 8 நாட்கள் விடுமுறை

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு சகல பல்கலைக்கழகங்களுக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் எட்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் வேண்டுகோளை அடுத்தே விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தமது விரிவுரைகளுக்கு வருவதில் ஏற்படக் கூடிய போக்குவரத்து சிரமம், பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டின் அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் என்பவற்றில் மாணவர்களின் பங்களிப்பு என்பவை காரணமாக மாணவர்கள் விடுமுறை கேட்டதன் காரணமாகவே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என அவர் கூறினார்.

இந்த விடுமுறை காலத்தில் விடுதிகளை புனரமைப்பதற்கு வசதியாக மாணவர்களை வெளியேறும்படி கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டின் அமர்வுகள் நடக்கும்போது மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை தடுப்பதற்காகவே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதென அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளன ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார கூறினார்.

கடந்த சில வருடங்களாக மாணவர்கள் மீது பிரயோகிக்கப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராக மாணவர்கள் எதிர்ப்புகளை காட்டுவார்களாயின் அரசாங்கம் மூடி மறைக்க முற்படும் பல விடயங்கள் அம்பலமாகிவிடுமென அரசாங்கம் பயப்படுவதினாலேயே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதென அவர் கூறினார்.
Disqus Comments