ஜித்தா: நிதாக்கத் புதிய தொழிலாளர்
கொள்கையினைத் தொடர்ந்து பல வெளி நாட்டினர் பணி நிறுத்தம் செய்துள்ளதால்
சாலைகளைச் சுத்தம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
சவூதியின் பல்வேறு பகுதிகள் குப்பை
கூளங்களாக காட்சியளிக்கின்றன. அதில் குறிப்பாக, முஸ்லிம்களின் புனித இடமான
மக்காவில் ஒரு துப்புரவு நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோருக்குக்
குடியுரிமை அட்டை (இக்காமா) புதுப்பிக்கப்படாததால், குடியுரிமை
புதுப்பிக்கப்படாதவர்கள் அனைவரும்(வங்கதேசத்தினர் அதிகம்) பணிக்கு
வரவில்லை. இதனால் அங்குள்ள சாலைகளில் சுமார் நான்கு நாட்களாக குப்பைகள்
தேங்கிக் கிடக்கின்றன.
இவற்றைக் கண்ட சவூதி இளைஞர்கள் சிலர் தாமாகவே களத்தில் இறங்கி குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தனர்.
இந்த நிலையில் குடியுரிமை
புதுப்பிக்கப்படாத வெளிநாட்டினரின் குடியுரிமை அட்டை புதுப்பிக்கும் பணி
தொடர்ந்து நடைபெறுவதாக, மக்காவின் துப்புரவு தொழிலாளர் நிறுவன இயக்குனர்
முஹம்மது அல் முர்கி கூறியுள்ளார்.
இதற்கிடையே இதுபோன்ற நெருக்கடியைச்
சமாளிக்க சவூதி நாட்டினர் அனைத்து துறைகளிலும் பணியமர்த்தப்பட வேண்டும்
என்றும் அனைத்து சவூதி நாட்டினரும் இதற்கு முன்வர வேண்டும் என்ற கருத்தும்
அந்நாட்டினரிடையே தற்போது ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
