தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு லேக்ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து “கப்றுக” (தென்னை) என்ற பெயரில் அதன் உத்தியோகபூர்வ பத்திரிகையை மூன்று மொழிகளிலும் வெளியிட்டு வருகிறது.
இப்பத்திரிகையின் ஓராண்டு பூர்த்தி விழா
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றபோது
இப்பத்திரிகையின் தமிழ் வெளியீட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் மர்லின்
மரிக்காருக்கு தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி
அமைச்சர் ஜகத் புஷ்பகுமார விருது வழங்கி கௌரவித்தார்.
லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவரும் சிரேஷ்ட
ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார லேக்ஹவுஸின் சட்டத்தரணி ரசங்க
ஹரிச்சந்திர, செயற்பாட்டுப் பணிப்பாளர் உபுல் திஸாநாயக்க, அமைச்சின்
செயலாளர் நிஹால் சோமவீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
மதுரங்குளி, விருதோடையைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்லின் மரிக்கார் தினகரன் தமிழ் தேசியப் பத்திரிகையின் இணை ஆசிரியராக கடமையாற்றிக்
கொண்டிருக்கும் அதேநேரம், கப்றுக பத்திரிகையின் தமிழ் மொழி வெளியீட்டுக்கு
பொறுப்பான ஆசிரியராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தென்னை மரம்
தொடர்பான தகவல்களைத் தாங்கி மாதா மாதம் இரண்டாவது வார வெள்ளிக்கிழமைகளில்
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன், தினமின, டெய்லி நியூஸ் ஆகிய மூன்று பிரதான
தினசரி பத்திரிகைகளிலும் கப்றுக இணைப்புப் பத்திரிகையாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது. (PO)

