Sunday, November 10, 2013

சவுதி அரேபியா காவல்துறை சோதனையின் போது இடம்பெற்ற வன்முறையில் ஒருவர் பலி!

ரியாத்தின் தெற்குப்பகுதியான மன்ஃபூஹாவில் சட்டமீறல் செய்யும் வெளிநாட்டவரைத் தேடி காவல்துறை மேற்கொண்ட சோதனையில் வன்முறை ஏற்பட்டதால், பலரும் படுகாயமுற்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துபோனார். அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்புப் படைகள் அழைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் ஆஃப்ரிக்கர்கள், குறிப்பாக எத்தியோப்பியர்கள் சட்டவிரோதமாக வாழ்ந்துவரும் இப்பகுதியில் சனியன்று மாலை சவூதி காவல்துறை சோதனை நடத்திய போது, கலகக்காரர்கள் ஆயுதந்தரித்து வந்து கடைகளையும், கார்களையும் அடித்து நொறுக்கினர். காவல் துறையினர் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.

அப்போது சம்பவித்த  வன்முறையில் கலகக்காரர்களால் கற்கள் வீசித் தாக்கப்பட்டதில் குடியிருப்பு வாசி ஒருவர் இறந்துபோனார். இதில் காயமுற்றுள்ள சுமார் 65 பேர் மன்னர் சவூத் மருத்துவ வளாகம், இளவரசர் சல்மான் மருத்துவமனை, அல் ஈமான் பொது மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரியாத் மாநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் நாஸர் அல் கஹ்தானியின் கூற்றுப்படி, ஒரு பெரும்காவல்படை அப்பகுதியின் வெளியேறு வழிகளை அடைத்தபடி உள்நுழைந்து சட்டமீறலாகக் குடியேறியிருந்த பலரையும் கைதுசெய்தது.

காவல்துறையின் இந்நடவடிக்கைக்கு அப்பகுதி சவூதி குடிமக்களும் பேருதவி புரிந்தனர். சட்டவிரோதக் குடியேறிகள் கற்கள் வீசித் தாக்கியதில் 32 வயது உள்ளூர் சவூதியர் ஒருவர் மரணமுற்றார் என்றும், 65 பேர் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments