Tuesday, December 10, 2013

இன்றைய கல்வி தராதர சாதாரண தரப் பரீட்சை ஒரு பார்வை

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை நாளை 10ம் திகதி இன்று காலை  ஆரம்பமாகவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து ள்ளதோடு, வினாத்தாள்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் சுட்டெண் அடிப்படையில் தமக்குரிய மேசைகளில் காலையில் சுமார் 8.15 மணிக்கு அமருவதன் மூலம் வீணான பதற்றங்களை தவிர்த்துக் கொள்ள முடியுமெனவும் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டார்.

அனைத்துப் பரீட்சார்த்திகளும் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டை அல்லது நடைமுறையிலுள்ள கடவுச் சீட்டு அல்லது அக்டோபர் 31ஆம் திகதியன்று 16 வயது பூர்த்தியாகாத மாணவர்கள் தபால் அடையாள அட்டையினையும் தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

மேற்படி அடையாள அட்டை மற்றும் பரீட்சை அனுமதியட்டையின்றி பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பைல், கையடக்கத்தொலைபேசி, கல்குலேட்டர் மற்றும் புத்தகங்கள், குறிப்புகள் என்பவற்றை பரீட்சை நிலையத்திற்குக் கொண்டு செல்வதோ அல்லது பரீட்சார்த்தி தமக்கு அண்மையில் வைத்திருப்பதோ சட்டப்படி குற்றமாகும்.

முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக கடும் தண்டனைகள் வழங்கப்படும். இவர்கள் வாழ்வில் என்றும் மீண்டும் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை , பிற மாணவர்களுக்காக பரீட்சை எழுத முற்படும் பல்கலைக்கழக மாணவர்களினதும் பல்கலைக்கழக உறுப்புரிமை நீக்கப்படுவதுடன், அவர்கள் அரசாங்கத்தினால் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்றுவதற்கம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் உறுதியாகக் கூறினார். அத்துடன் பரீட்சை முறைகேடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதிகாரிகளுக் கெதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

வருடந்தோறும் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் இறுதித் தறுவாயில் பரீட்சைக்கு சமுகமளிக்காமையினால், பெற்றோர் மாணவர்களின் வருகையை உறுதிப்படுத்துவதுடன், பரீட்சார்த்திகளுக்கு அமைதியான சூழலை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

க. பொ. த. சாதாரணதரப் பரீட்சை வரலாற்றிலேயே ஆகக் கூடிய எண்ணிக்கையான மாணவர்கள் தோற்றவுள்ளனர். இப்பரீட்சைக்கு இம்முறை 5 இலட்சத்து 78 ஆயிரத்து 140 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களுள், 3 இலட்சத்து 84 ஆயிரத்து 56 பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 84 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றனர்.

நாடு முழுவதுமுள்ள 4300 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. பரீட்சைக்கென 534 இணைப்பு நிலையங்களும் 33 பிரதேச சேகரிப்பு நிலையங்களும் இரண்டு மத்திய சேகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வருடம் 510 மாற்றுத்திறனாளிகளுக்கென இரத்மலானை, தங்காலை அம்பேபுஸ்ஸ, சிலாபம், கொழும்பு ஆகிய இடங்களில் விசேட கல்வி பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவர்களுக்குத் தேவையான அனைத்து சலுகைகளும் உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இம்முறை 10 மாணவர்கள் தமது விடைகளை வாய் மூலம் கூறவுள்ளனர். இவை பரீட்சை அதிகாரிகளினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு பின்னர் அதிகாரிகளினால் எழுதப்படவுள்ளன.

மேலும் மகஸன் சிறைச்சாலையிலுள்ள 3 சிறைக்கைதிகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களுக்கென சிறைச்சாலைக்குள் விசேட பரீட்சை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு

பரீட்சை நிலையங்கள் தோறும் பொலிஸாரினதும் முப்படையினரினதும் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் எடுத்துச் செல்லல், விடைத்தாள்களை சேகரித்துச் செல்லல் போன்ற செயற்பாடுகளின் போதும் பொலிஸ் ரோந்து செயற்பாடுகள் நடைமுறையிலிருக்கு மெனவும் அவர் கூறினார்.

பரீட்சை நடைபெறும் இடங்களில் ஒலிபெருக்கி பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் நிர்மாணப் பணிகள், கூட்டங்கள் மற்றும் வகுப்புகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளன.

பரீட்சையை முன்னிட்டு கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு வரை தனியார் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுவோர் உடனடியாக கைது செய்யப்படுவதுடன், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவரெனவும் அவர் உறுதிமொழியளித்தார்.

வினாத்தாள் அச்சிடும் அச்சகம் பூரண பாதுகாப்பின் கீழ் இயங்குவதனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் இனிமேலும் ஏற்பட வாய்பில்லையென்பதனால் மாணவர்களும் பெற்றோரும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை யெனக் கூறினார்.
Disqus Comments