அக்கரைப்பற்று 3ம் பிரிவிலுள்ள வீடொன்றிற்குள் பட்டப்பகலில் உட்புகுந்து
வீட்டில் இருந்த மூன்று இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான புதிய
மடிக்கணினி கையடக்கத் தொலைபேசி
என்பவற்றை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் 12 வயது
சிறுவனை சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கட்கிழமை காலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் பொலிசாரின் விசாரணையையடுத்து சிறுவன்
திருடுவதற்கு அவனை வழிநடத்திய பெண்ணையும் அன்றைய தினம் (26.05.2014)
பொலிசார் கைது செய்து விசாரணை செய்தனர். பின் அவர்களிடமிருந்து புதிய
மடிக்கணினியையும் கையடக்கத் தொலைபேசியையும் கைப்பற்றினர்.
சிறுவனையும் பெண்ணையும் அன்றைய தினம் திங்கட்கிழமை அக்கரைப்பற்று நீதவான்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக
மாவட்ட நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் பெண்ணை எதிர்வரும் 3ம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் சிறுவனின் தாய்
தந்தையர்களின் கண்காணிப்பில் இருக்க விடுத்து சிறுவர் நன்னடத்தை
உத்தியோகத்தரை சிறுவனை கண்காணிக்குமாறும் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது அக்கரைப்பற்று 3ம் குறிச்சியை
சேர்ந்த நபர் ஒருவர் தொழில் நிமித்தம் கனடாவுக்கு சென்று விடுமுறையில்
கடந்த ஏப்ரல் மாதம் 04ம் திகதி அக்கரைப்பற்றுக்கு வந்து அன்று காலை 11.00
மணியளவில் வீட்டில் மண்டபத்திற்குள் தூங்கி கொண்டிருந்தபோது பக்கத்தில்
இருந்த மடிக்கணினியையும் கைத்தொலைபேசியையும் அங்கு வந்த சிறுவன் எடுத்துச்
சென்றுள்ளான்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின்
அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை பொலிசார் சிறுவனை கைது செய்து பின்னர்
சிறுவனை வழிநடத்திய பெண்ணையும் கைது செய்து விசாரணை செய்த போது
அவர்களிடமிருந்து களவாடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து பொலிசார் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். சிறுவனும்
பெண்ணும் ஆலையடிவேம்பு கோளாவில் 1ஆம் பிரிவைச் சேர்ந்தவர்கள் என பொலிசார்
தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
