கல்விப் பொது தராதர (உயர்தர) பரீட்சை வினாப்பத்திரங்களை தயார் செய்யும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரை நீக்கி தனக்கு சார்பானவர்களை கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன நியமித்துள்ளதாக ஐ.தே.க.வின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சுமத்தினார்.
அத்தோடு கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைப்பதற்கு காரணமாக அமைந்த சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு மேற்கொண்டுள்ள உடன்பாடுகள் தொடர்பிலான உண்மை தன்மையை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் வெளியிடுவார். அதேபோன்று நாட்டில் தற்போது கல்வித்துறை ஊழல்கள் நிறைந்ததொன்றாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஐ.தே.கட்சியின் தலைமையகமான சிறி கொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடொன்றை மேற்கொண்டு இலவச கல்வி முறையினை சீரழிப்பது தொடர்பிலான கருத்துக்களை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருந்தார்.
இதற்கமைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்டு கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதித் தொகையை குறைத்து வருகின்றது. ஆறு சதவீதமாக கல்விக்கு ஒதுக்கிடப்பட்ட வீதமானது தற்போது நான்கு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலைகளின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அரசினால் உரிய வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தினால் பெற்றோர்களே தனது பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக உழைத்ததில் ஒரு பங்கை பாடசாலையின் மேம்பாட்டுக்கு செலவிடுகின்றனர்.
இதன் காரணமாக தற்போது நாட்டில் மின்சார வசதிகள் நீர் வசதிகள் இரசாயன கூடங்கள் இல்லாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இலங்கையில் காணப்படுகின்றது. இதற்கான மூல காரணம் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட உடன்பாடுகளே ஆகும். ஆகவே, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உடன்பாடுகளின் உண்மை தன்மையை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் வெளிப்படுத்துவார்.
இதேவேளை கல்விப் பொதுத்தராதர (உயர்தரம்) பரீட்சை வினாப்பத்திரங்களை தயார் செய்யும் பல்கலைக்கழக பேராசிரியர்களை அப்பதவியிலிருந்து கல்வி அமைச்சர் நீக்கியுள்ளார். இதற்கமைய பொருளியல் துறை சார்ந்த வினாப்பத்திரத்தை தயார் செய்யும் குழுவின் சிரேஷ்ட பேராசிரியரான டெனி அத்துபத்துவை நீக்கியதுடன் இன்னும் சிலரையும் நீக்கியுள்ளார்.
அதற்கு பதிலாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தனக்கு சார்பானவர்களை நியமித்துள்ளார். இலங்கையின் பரீட்சை திணைக்களத்தின் நடவடிக்கைகளில் கல்வி அமைச்சு தலையிடாது என்று கூறி வருகின்ற பந்துல குணவர்த்தன, பொருளியல் வினாப்பத்திரத்துக்கான கேள்விகள் தேர்வின் போது அமைச்சர் தனது கேள்விகளையும் வினாபத்திரத்தில் சேர்ப்பதற்காக பேராசிரியர்களை அச்சுறுத்தி வருகிறாராம்.
எனவே, தற்போது நாட்டின் கல்வி துறை ஊழல்கள் மிகுந்ததாக காணப்படுகிறது. தனியார் வகுப்பினை நடத்த கூடியவர்களை கல்வி அமைச்சர்களாக்கினால் நாட்டில் இலவச கல்வி முறைமை இல்லாதொழிக்கப்பட்டு விடும் என்றார்.
