கடந்த பதின்மூன்று வருட காலப் பகுதியில்
எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளான தாய்மார்கள் மூலமாக அந்நோய்த்
தாக்கத்துக்குள்ளான எழுபத்திரெண்டு குழந்தைகள் பிறந்துள்ளதாக தேசிய பாலியல்
நோய்கள் தடுப்பு மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர்
சிசிர லியனகே தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் பிறந்த அவ்வாறான
குழந்தைகளில் நூற்றுக்கு நாற்பது வீதமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல சென்ற
வருடம் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளான தாய்மார்களிடமிருந்து பன்னிரெண்டு
குழந்தைகள் பிறந்துள்ளனர். மகப்பேற்றின் போது தாய்மாரின் இரத்த மாதிரிகள்
பெறப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.
எனவே, மேல் மற்றும் தென் மாகாணங்களில் இதுவரை குழந்தைகளை பிரசவிக்கும்
தாய்மார்களிடமிருந்து இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள்
நடத்தப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் பிரசவத்தின் போது
தாய்மார்களின் இரத்த மாதிரிகளைப் பெற்று பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை
மேற்கொள்ளப்படும். குறிப்பாக அச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் போது
இப்பரிசோதனைகள் மீதான தாய்மாரின் விருப்பத்தை அறிதல் இன்றியமையாததாகும்.
ஆகவே தாய்மார்களின் விருப்பத்தை அறிந்த பின்னரே இரத்த மாதிரிப் பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படும் என்றார்.
