முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களையோ வன்முறைகளையோ பொதுபல சேனா அமைப்பு ஒருபோதும் மேற்கொள்ள வில்லை. முஸ்லிம் இனவாதத்தை தடுப்பது எமது நோக்கமே தவிர அப்பாவி முஸ்லிம் மக்களை அழிப்பது எமது நோக்கமல்ல என்று தெரிவிக்கும் பொதுபலசேனா எமக்கு எதிராக எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் முகம்கொடுக்க நாம் தயார் எனவும் குறிப்பிட்டது.
பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் புனித குர்ஆனை அவமதித்துள்ளார் என முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் நீதிமன்றில் உறுதி செய்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போது அவ்வமைப்பின் செயலாளரும் சம்பந்தப்பட்ட வருமான கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
பொதுபலசேனா அமைப்பு எப்போதும் ஏனைய மதங்களையோ மதத் தலைவர்க ளையோ அழிக்க வேண்டும் என நினைத்ததில்லை. நாட்டிற்கு எதிராக தீய சக்திகள் உருவாவது முழு நாட்டிற்குமே பாதிப்பினை ஏற்படுத்தும். அது பௌத்தனாக இருந்தாலும் இந்துவாக இருந்தாலும் கிறிஸ்தவமோ அல்லது முஸ்லிமாக இருந்தாலும் அனைவரையும் பாதிக்கும் விடயமாகும். அதே போல் இலங்கைக்குள் ஊடுருவி வரும் முஸ்லிம் தீவிரவாதம் மதவாதம் பற்றி பேசி னோமே தவிர நாட்டில் உள்ள அப்பாவி முஸ்லிம்கள் தொடர்பில் நாம் ஒரு போதும் தவறாக பேசவில்லை.
இந்த நாட்டின் அனைத்து இன மக்களுடனும் ஒன்றிணைந்து வாழவே நாம் நினைக்கின்றோம். ஆனால் அதை முஸ்லிம் இனவாதிகள் விரும்பாததன் காரணத்தினாலேயே தற்போது நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராகவோ அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும் வகையிலோ பொதுபலசேனா ஒருபோதும் செயற்பட்டதில்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை. தவறான வகையில் எம்மை சித்தரிக்கும் முயற்சியில் ஒருசில முஸ்லிம் அமைப்புகள் செயற்படுவதை நாம் பொருட்படுத்தப் போவதில்லை. நாட்டில் வளர்ந்து வருகின்ற முஸ்லிம் இனவாத தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது எம் அனைவரினதும் கடமை. அதை அரசாங்கம் செய்யாவிட்டாலும் நாட்டின்மீது அக்கறையுள்ள நாம் செய்வோம். அதற்காக ஒருபோதும் அப்பாவி முஸ்லிம் மக்களை அழிக்க மாட்டோம்.
இந்த நாட்டில் முஸ்லிம்களை ஆதரித்து வாழ தயாராகவே உள்ளோம்.ஆனால் முஸ்லிம்களின் மனதில் பௌத்த தீவிரவாதம் என்ற கருத்தை ஒரு சிலமுஸ்லிம் அமைப்புகள் பரப்பி எம்மிடம் இருந்து வேறுபடுத்தி வைக்கின்றனர்.
மேலும், பொதுபலசேனா அமைப்பிற்கு எதிராக முஸ்லிம் கலாசார திணைக்களம் ஆதாரங்களை சேகரிக்கலாம். வழக்கு தொடரலாம். ஆனால் எம்மை கட்டுப்படுத்த முடியாது. முஸ்லிம் அமைப்புகள் பௌத்தத்தை விமர்சிக்கும்போது பௌத்தர்கள் கொந்தளிக்காது அமைதியாக இருந்தனர். நாம் நினைத்திருந்தால் முஸ்லிம் அமைப்பின் அக்கருத்திற்கு எதிராக கடுமையாக செயற்பட்டிருக்க முடியும். ஆனால், நாம் அவ்வாறு செயற்படவில்லை. இப்போதும் முஸ்லிம் அமைப்புகள் எமக்கெதிராக எத்தனை வழக்குகள் தொடுத்து எம்மை குற்றவாளியாக்க நினைத்தாலும் நாம் அதற்கு முகம் கொடுக்க தயார். எம்மை ஒருபோதும் குற்றவாளியாக்கி விட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
.jpg)