Saturday, July 12, 2014

ஊவா மாகாண சபை கடந்த நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது

ஊவா மாகாண சபை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைய மாகாண சபையைக் கலைப்பதற்குரிய பணிப்புரையை தாம் விடுத்ததாக ஊவா மாகாண ஆளுநர் நந்த மெதிவ் அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் கிடைக்கப்பெற்று ஒரு வாரத்திற்குள் தேர்தல்கள் ஆணையாளரால் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிக்கப்படும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி நிறைவடையவிருந்தது.
ஊவா மாகாண சபைக்காக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இருந்து 32 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
2 போனஸ் ஆசனங்களுடன் 25 ஆசனங்களை கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனதாக்கி கொண்டது.
நான்கு இலட்சத்து 18, 906 வாக்குகள் பெற்று 72. 39 வீத வாக்குகளை கூட்டமைப்பு பெற்றிருந்தது.
ஒரு இலட்சத்து 29,144 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை கடந்த ஊவா மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றிருந்தது.
மலையக மக்கள் முன்னனியும், மக்கள் விடுதலை முன்னியும் தலா ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டன.
Disqus Comments