இணையத்தளம் ஊடாக நம்பிக்கையான சூழல் ஒன்றை உருவாக்கி திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து யுவதிகளை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுவரும் திட்டமிட்ட குழு ஒன்று தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன் படி இந்தக் குழுவின் இரு நபர்களை கைது செய்துள்ள மாத்தறை புலனாய்வுப் பிரிவு அதன் தலைவரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை நாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
யுவதிகளை திருமண ஆசைகாட்டி ஏமாற்றி பணம் பறிக்கும் இந்த திட்டமிட்ட குழுவின் தலைவராக பிரித்தி விராஜ் ரத்நாயக்க அல்லது பிரித்தி விராஜ் அமரசிங்க என்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண அவர் தற்போது மலேஷியாவில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் சர்வதேச பொலிஸாருக்கு சிவப்பு அறிவித்தல் ஒன்றை வழங்குவதன் ஊடாக அவரை கைது செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பிரதான சந்தேக நபரின் இரு வேறு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கேசரிக்கு வழங்கிய அவர் திருமண யோசனைகள் தொடர்பில் குறிப்பாக இணைய திருமண யோசனைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் காரியாலயத்துக்கு கடந்த மே மாதம் 21 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற முறைப்பாடு ஒன்றை விசாரணை செய்த போதே இந்த திட்டமிட்ட குழு தொடர்பான விடயங்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தேசபந்து தென்னகோனின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய மாத்தறை புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பாத்திய ஜயசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளிலேயே இந்த விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
வெலிகம பொலிஸ் பிரிவில்,யட்டிகல, மிரிஸ்ஸ பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பிலியந்தலையில் நடத்திவந்த திருமண சேவைகள் நிறுவனம் ஒன்றினூடாகவே தகவல்கள் பெறப்பட்டு இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த திருமண சேவைகள் நிறுவனத்தின் உரிமையாளரை ஸ்கைப் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொண்டு திருமணம் குறித்து கூறி யுவதிகளின் தொலைபேசி இலக்கம் மற்றும் வீட்டு தொலைபேசி இலக்கங்களைப் பெற்றே இந்த திட்டமிட்ட குழு மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளது. முதலில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாட்டில், இணையம் ஊடாக தொடர்புகொண்டு திருமணம் முடிப்பதாக தொடர்பினை வளர்த்துள்ள நபர் ஒருவர், குறித்த பெண்ணுக்கு பரிசு ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அதனை பெற சுங்கப் பிரிவுக்கு நான்கு இலட்சத்து 78 ஆயிரத்து 620 ரூபா செலுத்த வேண்டும் எனக் கூறி பண மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய வங்கிக்கணக்குகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை மையப் படுத்தியதாக மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை களில் சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளனர்.