நாட்டில் முஸ்லிம் சமூகத்தை அழிக்க அரசாங்கம் கையில் எடுத்துள்ள ஆயுதமே பொதுபலசேனா. அப்பாவி மக்களை போராட்டத்திற்கு தூண்டி மீண்டுமொரு முஸ்லிம் சிங்கள கலவரத்தை ஏற்படுத்த வேண்டாம் என தெரிவிக்கும் தம்பர அமிலதேரர் முஸ்லிம்கள் அச்சமடைய வேண்டாம் சிங்கள மக்கள் முஸ்லிம்களை பாதுகாப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
ரமழானை முன்னிட்டு அசாத்சாலி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போதே தம்பர அமில தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டில் மூவின சமூகங்களும் ஒன்றிணைந்து வாழ்ந்தாலும் ஒவ்வொரு இனத்தவரும் மனதில் பிரிவினையுடனும் விரோதத்துடனும் பழக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அண்மைய கால சம்பவங்கள் முக்கிய காரணமாகும். குறிப்பாகச் சொல்வதாயின் இந்த நாட்டில் இடம்பெறக் கூடாத யாவரும் விரும்பத்தகாத ஒரு சம்பவமே அளுத்கம பேருவளை இனக்கலவரம். முஸ்லிம் சமூகத்தின் மீதான காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை இந்த அரசாங்கம் மேற்கொண்டு இன அழிப்பினை மேற்கொள்ள முயற்சித்துள்ளது. நாட்டில் முஸ்லிம் சமூகத்தினை அழிக்க அரசாங்கம் கையில் எடுத்துள்ள ஆயுதம் பொதுபலசேனா பௌத்த அமைப்பு. ஒரு சிலரின் பொய்யான கருத்துக்களையும் தீவிரவாத அமைப்புக்களின் பயத்தையும் காட்டி நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் தாக்க முயற்சிக்கின்றனர்.
முஸ்லிம்கள் மீது அடக்கு முறை மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் சமூகம் அமைதியாக செயற்பட்டு சரியான முடிவுகளை எடுத்தனர். தாம் எப்போதும் சரியான பாதையில் செல்வோம் என்பதை பௌத்த பேரினவாதிகளுக்கு விளங்கப்படுத்தி விட்டனர்.
இந்த நாட்டில் தமிழ் - சிங்கள மக்களிடையே உள்ள உறவு முறைமையினை விடவும் சிங்கள - முஸ்லிம் மக்களிடையே உள்ள உறவு முறை பலமானது. மத்திய கிழக்கில் இருந்து முஸ்லிம் ஆடவர்கள் இலங்கைக்கு வந்த போது சிங்கள பெண்கள் விருப்பத்துடன் மண முடித்து வாழ்ந்தனர். அப்போதிருந்து இன்று வரை சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையான இனமாக வாழ்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் தாக்குதலின் போதும் சிங்களவர்களே முஸ்லிம்களை பாதுகாத்தனர். அதேபோல் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தலில் முஸ்லிம்களின் பங்கும் மிக முக்கியமானதே. சிங்களவர்களிடம் இருந்து முஸ்லிம்கள் ஒருபோதும் பிரியவில்லை. எனவே இப்போது ஒரு சில காரணங்களைக் காட்டி நாட்டில் நூறு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட சிங்கள - முஸ்லிம் கலவரத்தை மீண்டும் இந்த நாட்டில் ஏற்படுத்தி விட வேண்டாம். யுத்தத்தின் சுவை கண்ட அரசாங்கம் இன்று யுத்தம் ஒன்று இல்லாததன் காரணத்தினால் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களின் போது இந்த அரசாங்கம் தமிழர்களை பாதுகாக்காததன் கரணத்தினாலேயே இன்று சர்வதேசத்தின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எமக்கு எதிரியாக விடுதலைப் புலிகள் இருந்தனரே தவிர தமிழ் மக்கள் ஒருபோதும் எதிரிகள் அல்ல.
ஆனால் அரசாங்கம் யுத்தம் தொடங்கிய காலம் தொடக்கம் இன்று வரையில் தமிழர்கள் விடயத்தில் தவறிழைத்துக் கொண்டே வந்துள்ளது. சர்வதேசம் இந்த நாட்டிற்குள் வருவதை நாட்டு மக்கள் எவரும் விரும்பவில்லை. ஆனால் அரசாங்கமே சர்வதேச விசாரணைக்கு ஏற்ற அனைத்து வழி முறைகளையும் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறது.
யுத்தக் குற்றங்களை மட்டுமே விசாரணைக்காக எடுத்துக் கொண்ட சர்வதேசம் இப்போது முஸ்லிம்கள் மீதான தாக்குதல் பள்ளிவாசல்கள் உடைப்பு ஆகிய பிரச்சினைகளையும் ஆதாரமாகக் கொண்டு தமது விசாரணைகளை பலப்படுத்தி விட்டது. எனவே இவை அனைத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவுமே பொறுப்பு கூற வேண்டும்.
பாதுகாப்பு செயலாளர் பொதுபலசேனா அமைப்புடன் தொடர்புபடவில்லை என்றால் ஏன் பொதுபல சேனா அமைப்பினரை இன்னும் கைது செய்யவில்லை. அவ் அமைப்பினர் இனவாதத்தை சுரண்டி சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக போராடுகின்றமை வெளிப்படையாகத் தெரிந்தும் அரசாங்கம் இன்னமும் பொதுபலசேனா அமைப்பை கைது செய்யாது பாதுகாப்பினையும் உதவிகளையும் வழங்குகிறது. முஸ்லிம்களை அழிக்கும் செயற்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சும் பொதுபலசேனா அமைப்பும் செயற்படுகின்றது என்பதே உண்மை. இதை அனைத்து முஸ்லிம்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.