நாட்டில் அதிகரித்து வரும பாலியல் வன்முறை
சம்பவங்கள் சாதாரண வாழ்க்கை நிலையை சீரழித்து விடுகின்றன. வடக்கு கிழக்கு
மலையகம் என பாலியல் வன்முறை தொற்று நோயாக பரவி வருகின்றது. இறக்குவாணையில்
அப்பாவி சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு
சீரழிக்கப்பட்டுள்ளார். அத்தகைய பாதக செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் அதனை
இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் உட்பட அனைத்து தலைமைகளும் ஆக்கபூர்வமான
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென தொழிலாளர் விடுதலை முன்னணி பகிரங்கமாக
வலியுறுத்தியுள்ளது.
இறக்குவாணை சம்பவம் தொடர்பில் மலையக சமூகத்தினர் அணிதிரண்டு போராட்டம்
நடாத்தி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதும் ஏற்றுக்
கொள்ளக்கூடியதொன்றாகும். அத்துடன் இவ்வாறான கொடூர குற்றங்களை புரிகின்ற
நபர்கள் மீது ஏற்றதாழ்வு இன்றியும் இன மொழி பாராதும் அதிகபட்ச தண்டனையை
வழங்கி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாத அளவிற்கும் நடவடிக்கை எடுக்க
வேண்டுமெனவும் முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் முன்னணியின் தலைவர் டி. அய்யாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
மலையகம் உட்பட அனைத்து பிரதேசங்களிலும் பாலியல் வன்முறை சிறுவர்
துஷ்பிரோயங்கள் சர்வசாதாரணமான விடயங்களாகவிட்டன. பாரதூரமான இத்தகைய
குற்றச்செயல்கள் நாட்டில் தொடர கூடியவை அல்ல. இவற்றை கட்டுப்படுத்த
தவறினால் நாடு மேலும், மேலும் அழிவு பாதைக்குள்ளேயே இட்டுச் செல்லும்
என்பதில் சந்தேகம் கிடையாது.
இறக்குவானை டெல்வின் தோட்டத்தில் சிறுமி மீது பலாத்கார வல்லுறவுச் செயலை
கண்டித்து பாதுகாப்பு எடுக்கவும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான
தண்டனை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியும் மலையக தொழிலாளர்கள் ஒன்று
திரண்டு நடத்திய மரியல் கண்டனப் போராட்டம் மக்களின் எதிர்ப்பையும்
தொழிலாளர்கள் உணர்வையும் வெளிப்படுத்திய போராட்டமாகும்.
தொழிலாளர்களின் உணர்வுபூர்வமான போராட்டத்தை அரசாங்கம் கவனமெடுத்து நாட்டில்
பலாத்கார பாலியல் வன்செயலை தடுக்கவும் எதிர்காலத்தில் இத்தகைய
நபர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். இத்தகைய பலாத்கார பாலியல்
வல்லுறவு நாட்டில் எல்லாத் தரப்பினர்களாலும் நடத்தப்படுவதை அண்மைக்கால
சம்பவங்கள் தெரிவிக்கின்றன. இதனை கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
மலையகத்தில் இத்தகைய பலாத்கார பாலியல் வல்லுறவு செயலை உணர்வு பூர்வமாக
கண்டிக்க வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடு இந்த ஒன்றுபட்ட சுதந்திரமான
கண்டன மறியல் போராட்டமாகும். இந்த உணர்வை நாம் மதிக்கின்றோம். அரசாங்கம்
கவனத்திற் கொண்டு இத்தகைய செயலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க முன்வர
வேண்டும்.