Monday, July 21, 2014

நகைக்காக கணவன், மனைவியின் சடலங்களை தோண்டிய ஐவர் கைது!

புதைக்கப்பட்ட சடலங்களுடன் தங்க நகைகள் இருக்கக் கூடுமென்று கருதி புதைகுழிகளை தோண்டிய ஐவரை வெலிமடைப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததும் நீதிபதி அவர்களை தலா ஒரு இலட்சம் ரூபாவுக்கான சரீரப் பிணையில் விடுவித்தார்.
 
வெலிமடை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி எல்.வி. லங்காபுர முன்னிலையில் சட்டவிரோதமான முறையில் புதைகுழிகளை தோண்டிய ஐவர் ஆஜர் செய்யப்பட்டனர்.
 
வெலிமடை அப்புத்தளை வழியில் அமைந்துள்ள ஜும்மா மஜீட் பள்ளிவாசலுக்குச் சொந்தமான மயானத்தில் புதைக்கப்பட்ட கணவன் மனைவி ஆகியோரின் சடலங்களே தோண்டப்பட்டுள்ளன.
 
சந்தேக நபர்கள் ஐவரும் வெலிமடை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதும் நீதிபதி அவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா என்றடிப்படையில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கான சரீரப் பினையில் விடுவித்தார். அத்துடன் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிபதி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டார்
Disqus Comments