- இர்ஷாத் றஹ்மத்துல்லா -
நாம் இடம் பெயர்ந்து வந்த போது எமக்கு உதவிய புத்தளத்து மக்களை எமது உயிர் இருக்கும் வரை நானும், எமது மக்களும் நன்றியுணர்வுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடந்த 5 வருடகாலமாக இந்த புத்தளம் மக்களுக்கு தேவையான பணிகளை செய்யவிடாது சில சுயநல அரசியல் போக்கு கொண்டவர்கள் தடைகளை ஏற்படுத்தினார்கள் என்றும் கூறினார்.
புத்தளம் மாவட்டத்தில் மதுரங்குளி கஜூவத்தை பாடசாலையில் இடம் பெற்ற முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலைக்கான சுற்றிமதில்,மற்றும் பாடசாலைக்கட்டிடம் என்பனவற்றை திற்நது வைத்ததுடன்,புதிய வகுப்பறைக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடல் ஆகிய நிகழ்வில் கலந்து கொண்டதுடன்,நடத்தப்பட்ட இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள்,மற்றும் சின்னங்கள் எனபனவற்றையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கி வைத்தார்.
கஜூவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எம்.சன்ஹீர் (கபூரி) தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.முசம்மில், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.றியாஸ், புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் தொழிலதிபர் அலி சப்ரி, சமூக சேவையாளரும், தொழிலதிபருமான எம்.நயீம், பொறியியலாளர் பைசர்கான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றும் போது –
கொத்தான்தீவு முதல் புழுதிவயல் வரைக்குமான பகுதிகள் என்பது எனக்கு நன்கு பரீட்சயமான பகுதியாகும்.நாம் இடம் பெயர்ந்து வந்த போது எமக்கு முதலில் அடைக்கலம் கொடுத்த இடம் இந்த பிரதேசங்களாகும்.துவிச்சக்கர வண்டியிலும்,மோட்டார் சைக்கிளிலும்,வாகனங்களிலும் இந்த கிராமங்களுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளேன்.அகதி முகாமிலிருந்து பாராளுமன்றம் சென்றவன் என்ற வகையில் மக்களின் உணர்வுகளை நன்கறிந்தவன் என்ற வகையில் இந்த பிரதேசத்திற்கு எனது பணிகளை ஆற்ற வேண்டியது கடமைாகும்.அதை உணர்ந்ததன் பொருட்டு இந்த மாவட்ட இளைஞர்,யுவதிகளின் எதிர்கால திட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தினேன்.ஆனால் துரதிஷ்டம் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற சில அரசியல்வாதிகள் அதனை தடுத்தார்கள்.அபிவிருத்திகளை கொண்டுவருகின்ற போது அதற்கு இடைஞ்சல் கொடுத்தார்கள்.பாடசாலைக் கட்டிடங்களை அமைக்க அடிக்கல் நடும் நிகழ்வுக்கு வருவதை தடுத்தார்கள்.அது மட்டுமல்ல வடக்கு-கிழக்குக்கு வெளியே தமிழ் மொழி மூலமான கல்வியல் கல்லுாரி ஒன்றினை பாலாவியில் நிர்மாணிக்க நடவடிக்கையெடுத்த போது அதற்கு இடைஞ்சல் கொடுத்தார்கள்.இதற்கென 350 பில்லியன் ரூபாய்களை நேர்வே அரசு தருவதற்கு முன்வந்திருந்தது..இது அமையப் பெற்றிருந்தால் வருடமொன்றுக்கு பல நுாரு இளைஞர்கள் உயர் தொழில் வாய்ப்புக்களை பெற்றிருப்பார்கள்.இந்த சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது.
சில அரசியல் வாதிகள் என்மீது அபாண்டங்களை சுமத்தினர்.நான் எந்த அறிக்கையினையும் அவர்களுக்கு எதிராக விடவில்லை.அல்லாஹ் போதுமானவன்,அவனிடம் இந்த விடயத்தை விட்டுவிட்டேன்.என்னை அரசியல் ரீதியாக வீழ்த்துவதற்கு சில கடும் திட்டங்களை வகுத்தனர்.ஆனால் அல்லாஹ் எனக்கு நன்மையினை நாடுகின்றான். எமக்கு எதிராக செயற்படும் எதிரிகள் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியில் மிகவும் பலம் வாய்ந்த அமைச்சினை நாம் பெற்றிருந்தோம்.ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவராக நான் இருந்தேன்.ஆனால் எமது சமூகத்திற்கு எதிராக இனவாத கடும் போக்கு அமைப்பு செயற்பட்டது.அதனை கட்டுப்படுத்துங்கள் என்று சொன்னோம்.ஆனால் அது நடை பெறவில்லை அதனால் ஆட்சி மாற்றம் ஒன்றை செய்ய நேரிட்டது.அதற்கு தேவையான நம்பிக்கையூட்டும் பலத்தினை நாங்கள் புதிய ஆட்சி உருவாக்குவதற்கு வழங்கினோம்.
இன்று எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு அதே போன்று பலம் வாய்ந்தது.அன்று இருந்த நிறுவனங்களை விட பல நிறுவனங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது.இது ஜனாதிபதி மற்றும் பிரதமர் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை இந்த அரசியல்வாதிகளும்,அவர் சார்ந்து நிற்கும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் தேவையான அனைத்து நடவடிக்கையினையும் எடுப்பதாகவும் உறுதியளித்தார்.