Monday, March 23, 2015

விருதோடையில் அரபிக் கல்லூரிக்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு

முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மதுரங்குளி விருதோடை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட றியாலுஸ் ஸாலிஹாத் அல் அரபிய்யா பெண்கள் அரபிக் கல்லூரிக்கான புதிய கட்டிடம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் றிசாத் பதியுத்தீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்தக் கட்டிட்தைத் திறந்து வைத்தார். 

விருதோடை ஜூம்ஆப் பள்ளியில் கடந்த வருடம் இந்த பகுதி நேர பெண்கள் அரபிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு ஜூம்ஆப் பள்ளியிலேயே வகுப்புக்கள் இடம்பெற்று வந்தன. இந்தக் கல்லூரியை தனியாக அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்ட போது அதற்கான கட்டிடத்தை விருதோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற எஸ். எம். எம். இபுராஹீம் அவர்களின் நினைவாக அவரது மகன் பிரபல தொழிலதிபர் எம். ஐ. எம். நயீம் நிர்மாணித்துக் கொடுத்துள்ளார். சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு மர்ஹூம் எஸ். எம். எம். இபுராஹீமின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் விருதோடை ஜூம்ஆப் பள்ளிக்கு வக்பு செய்யப்பட்டது. 

ரியாலுஸ் ஸாலிஹாத் அல் அரபிய்யா பெண்கள் அரபிக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் என். எம். எம். சதாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மின்சகத்தி எரிபொருள் துறை இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எஸ். எச். எம். முஸம்மில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம். ஐ. எம். ஹனீபா சஹீத், இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஏ. ஆர். எம். ரபாத் அமீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். சிறந்த உலமாக்களின் மார்க்க சொற்பொழிவுகளும் இதன் போது இடம்பெற்றது






Disqus Comments