Wednesday, October 30, 2013

றூபெல் ஹொசைனின் ஹட்ரிக் ஆல் நியூசிலாந்தைத் தோற்கடித்தது பங்களாதேஷ். (வீடியோ இணைப்பு)

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவத போட்டியில் பங்களாதேஷ் அணி இலகுவான வெற்றியைப் பெற்றுள்ளது.

ஷேரே பங்களா மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது.
13 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி, 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ஆனால் 4ஆவது விக்கெட்டுக்காக 154 ஓட்டங்கள் பகிரப்பட்டன. அதன் பின்னர் இறுதி நேரத்தில் ஓட்டங்கள் பெறப்பட அவ்வணி 265 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்பிக்கூர் ரஹீம் 98 பந்துகளில் 90 ஓட்டங்களையும், நயீம் இஸ்லாம் 115 பந்துகளில் 84 ஓட்டங்களையும், மகமதுல்லா 30 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் நீஷம் 9 ஓவர்களில் 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ரிம் சௌதி 10 ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், கொரே அன்டர்சன் 8.5 ஓவ6ர்களில் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
265 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. நீண்ட இடைவெளியின் பின்னர் 33 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டு, நியூசிலாந்து அணிக்கு 206 ஓட்டங்கள் வழங்கப்பட்டன. நியூசிலாந்து அணி 29.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்று டக் வேர்த் லூயிஸ் அடிப்படையில் 43 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக கிரான்ற் எலியட் 77 பந்துகளில் 71 ஓட்டங்களையும், கொரே அன்டர்சன் 31 பந்துகளில் 46 ஓட்டங்களையும், அன்ரன் டேவ்சிச் 29 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர். இதில் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் துடுப்பெடுத்தாட மைதானத்திற்கு வந்திருக்கவில்லை.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ஹட் ட்ரிக் சாதனை படைத்த றூபெல் ஹொசைன், 5.5 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். சொஹக் கஸி, அப்துர் ரஸாக், மகமதுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியில் நாயகனாக றூபெல் ஹொசைன் தெரிவானார்
Disqus Comments