Tuesday, October 29, 2013

தம்புள்ளை காளி கோயில் இடித்து தரைமட்டம்

(TM) பல வருடங்களாக தங்களது வழிபாட்டு தலமாக விளங்கிய ஆலயம் தற்போது முற்றாக அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாக அங்குள்ள தமிழர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் புனித பூமியாக அடையாளப்படுத்தப்பட்ட எல்லைக்குள் இந்த ஆலயம் அமைந்திருந்தது.

அந்தப் பகுதிக்குள் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட போதிலும் ஆலயத்தில் தொடர்ந்தும் பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

ஆலயத்தை அந்த இடத்திலிருந்து அகற்றுமாறு பௌத்த விகாரையின் பிரதம பிக்குவினால் ஆலய பரிபாலகர்களுக்கு அழுத்தங்களும் நெருக்குதல்களும் கொடுக்கப்பட்டுவந்தன.

ஆலயம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய ஆலய பரிபாலகரான கே.லட்சுமி, ஆலயத்திலுள்ள உடமைகளை அகற்றுவதற்கு நாளை புதன்கிழமை வரை கால அவகாசம் தான் கேட்டிருந்ததாகக் கூறுகின்றார்.

நேற்று திங்கட்கிழமை குறித்த விகாரையின் பிரதம பிக்குவினால் இது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்பட்ட போது அதனை அகற்றுவதற்கு முன்னதாக சமய கிரியைகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி இந்தக் கால அவகாசத்தை தான் கேட்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார் என்று பிபிசி தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே அம்மன் விக்கிரகம் அகற்றப்பட்டு சேதமாக்கப்பட்டதையடுத்து, புதிய விக்கிரகமொன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜனினால் வழங்கப்பட்டிருந்தது. அதனைக் கூட வைத்து வழிபாடு செய்ய முடியாத நிலை தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கோவிலுக்கு அண்மையில் ஒரு பள்ளிவாசல் அமைக்க காணி தருவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார் இப்படிக் கூறியபின்னர் இது நடந்துள்ளதென ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் கூறினார்.

கோவில் அமைக்க ஒரு காணியை ஒதுக்கி கொடுக்கும்படி பிரதேச செயலாளருக்கு பணிக்குமளவுக்கு ஜனாதிபதி சென்றார் என அவர் கூறினார்.

தம்புள்ளை நகரிலிருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் பிரதேச செயலாளர் காணி ஒதுக்கினார் எனவும் புதிய காணி கிடைக்கும்வரை கோவிலுக்கு அண்மையில் வாழ்ந்தோருக்கு தற்காலிக வீடுகளை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் ரூபா கொடுக்கப்பட்டதெனவும் தெரிய வந்துள்ளது.

ஆயினும் கோவில் நிர்வாகம் புதிய இடத்துக்கு போக விரும்பவில்லை என யோகராஜன் கூறினார் இந்த கோவில் இடிக்கப்பட்டதையிட்டு இந்து முன்னனி எனும் அமைப்பு தனது மனவருத்தத்தை வெளியிட்டது. இந்த நடவடிக்கையால் தாம் பெரிதும் கலக்கமுற்று இருப்பதாக இந்து முன்னனியின் பேச்சாளர் கலாநிதி ஏ.என்.குமரகுருபரன் கூறினார்.

இந்த பகுதியில் வாழும் சகல இனஇ மத பிரிவினருக்கும் இடையில் நல்லெண்னம் நிலைக்கும் வகையில் உரு சுமுகமான தீர்வை காண வேண்டுமென அவர் அதிகாரம் வாய்ந்தோரிடம் கேட்டுள்ளார்.

தம்புள்ளை மகா பத்திரகாளியம்மன் ஆலயம் இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவே இந்த ஆலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Disqus Comments