Sunday, July 20, 2014

அமைச்சுப் பதவியிலிருந்து தாம் விலகாமைக்கு காரணம் என்ன.? விளக்குகிறார் ஹக்கீம்

எமது சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற வன்முறைகளைக் கருத்திற்கொண்டு இந்த அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற வேண்டும், நான் அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிழம்பின. ஆனால் அமைச்சுப் பதவிக்கான இடத்தினை சங்கீதக் கதிரை விளையாட்டாகப் பயன்படுத்தினால் எம்மை அடக்க முயற்சிக்கும் இந்த சக்திக்கு தீனி போடும் செயலாக மாறிவிடும் அது மாத்திரமன்றி நான் அமைச்சுப்பதவியிலிருந்து விலகினால் அமெரிக்க ஏகாதிபத்தியம் சொல்வதைப்போல் தான் அமைச்சுப் பொறுப்பினை விலகியதாகவும், அமெரிக்காவின் எடுப்பார் கைப்பிள்ளையாக நாம் செயற்படுவதாகவும் கதைகளைப் புனைந்து அப்பாவி நாட்டுப் புற சிங்கள மக்கள் மத்தியில் ஓர் அரசியல் நாடகத்தினை தோற்றுவிக்கும் நிலை ஏற்படும் என்று அமைச்சர் ஹக்கீம் கூறினார் .
 
அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில்,
 
எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதிக்குள் நாடு தழுவிய ரீதியில் தேர்தலொன்று இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இக்காலப் பகுதியில் பல்வேறான விடயங்கள் கட்சிகளுக்குள் நிகழலாம். அத்தனை விடயங்களையும் நிதானமாக அவதானித்து எமது சமூகத்தின் விமோசனத்துக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவை எடுக்கும்
 
தேர்தல் ஒன்று வந்தால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் என பலர் எதிர்பார்க்கின்றார்கள். குறிப்பிட்ட ஆறு மாத காலப்பகுதிக்குள் ஆயிரம் விடயங்கள் நடக்கலாம் இவற்றையெல்லாம் நிதானமாகப் பார்த்திருந்து நம் சமூகத்தின் விமோசனத்தைக் கருத்திற்கொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவை எடுக்கவுள்ளது.
 
இலங்கையில் அரசியல் வரலாற்றைப் பொறுத்த மட்டில் நாம் எந்தத் தரப்பில் இருந்த போதிலும் எமது முஸ்லிம் மக்களுக்காக நியாயம் கிடைக்கும் வண்ணம் செயற்பட்டிருக்கின்றோம். யுத்த சூழலின்போது கூட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எமது மக்களின் நன்மைக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றோம்.
 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் அடுத்த கட்ட அரசியலில் பாரிய சவால்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம். அதனைப் பற்றி கடந்த சில காலப் பகுதிக்குள் நாம் பொதுக் கூட்டங்களில் பேசியதன் பின்னர் எமது முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் வெடித்தன.
 
பேருவளை, அளுத்கம போன்ற பிரதேசங்களில் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாமலேயே இருக்கின்றது. நடந்த சம்பவங்களில் இரண்டு பக்கமும் பிழை இருக்கின்றது என்று சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கின்றது.
 
முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை முற்றுமுழுதாக அழித்து நாசமாக்கி அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் வகையில் கங்கணம் கட்டும் தரப்பிற்கு இப்போது எதிரியாக முஸ்லிம்களே உள்ளனர். தமிழ்த் தரப்பை அழித்து நாசமாக்கிய கையோடு அவர்களுக்கு எதிரிகள் வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை மதவாத ரீதியாக உருவாக்கி அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து அத்தரப்பிற்கு அங்கீகாரத்தை வழங்கியிருப்பதானது எம்மை ஆத்திரமடையச் செய்துள்ளது.
 
பொதுபல சேனா காலத்திற்குக் காலம் அமைச்சுக்குள் புகுந்து பல அட்டகாசங்களைப் புரிகின்றன. அதனை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது. அண்மையில்கூட ஊடகத்துறை அமைச்சினுள் புகுந்து இந்த நாட்டு ஊடகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை என குற்றம் சுமத்தி சர்வதேசத்திற்கு செய்திகள் மாறிப் போகின்றது என குறை கூறிய போது அவர்களை அனுசரித்து, வணங்கி, அவர்களை ஆறுதலாக உட்கார வைத்து தவறு நடந்திருக்கின்றது அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம் என கூறி வழியனுப்பப்பட்டுள்ளனர்.
 
எமது சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற வன்முறைகளைக் கருத்திற்கொண்டு இந்த அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற வேண்டும், நான் அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிழம்பின. ஆனால் அமைச்சுப் பதவிக்கான இடத்தினை சங்கீதக் கதிரை விளையாட்டாகப் பயன்படுத்தினால் எம்மை அடக்க முயற்சிக்கும் இந்த சக்திக்கு தீனி போடும் செயலாக மாறிவிடும் என்பதற்காகவே நாம் பதவி விலக வில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் சொல்வதைப்போல் தான் அமைச்சுப் பொறுப்பினை விலகியதாகவும், அமெரிக்காவின் எடுப்பார் கைப்பிள்ளையாக நாம் செயற்படுவதாகவும் கதைகளைப் புனைந்து அப்பாவி நாட்டுப் புற சிங்கள மக்கள் மத்தியில் போய்ச் சொல்லி திரும்பவும் ஓர் அரசியல் நாடகத்தினை அந்நிலைமை தோற்றுவிக்கும் எனவும் கூறினார்
Disqus Comments