சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்
இந்நாட்டில் எந்த விதமான பிரச்சினைகளும் கிடையாது. ஆனால், அரசாங்கமே தனது
அற்பத் தேவைகளுக்காக இவ்விரண்டு சமூகங்களுக்கிடையில் இன வன்முறையை
தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று ஜே.வி.பி.
தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இரத்தினபுரி மாநகர சபையில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
நாட்டின் உண்மை நிலையை பொதுமக்கள் அறிந்திடாத வண்ணம் மக்களை திசைதிருப்பும்
நோக்கத்துடன் இந்த இன வன்செயல்களை அரசாங்கம் தூண்டி விடுகின்றது.
சிங்கள மக்களுக்கு முஸ்லிம் மக்களையோ, தமிழ் மக்களையோ தாக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.
அவர்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணமே
உள்ளது. ஆனால் அவர்களின் மனங்களை திசை திருப்பும் வகையில் நாட்டில் இன
வன்செயல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பேருவளை, அளுத்கம, பகுதியில் தேவையற்ற
இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
1980, 1983ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கெதிராக இன வன்செயல்கள் இடம்பெற்றன.
இதற்கு காரணம் தமிழ் - சிங்கள மக்களிடையே ஏற்பட்ட குரோதமில்லை. அப்போதைய
ஐ.தே.க. அரசாங்கம் உண்மை நிலையை மக்கள் அறிந்திடாத வண்ணம் அவர்களை திசை
திருப்பும் வகையில் வன்செயலை தூண்டிவிட்டது.
